தாமதமாகும் பீரியட்ஸ்-காரணம் பல!

0
  • Monday, February 6, 2012
  • Unknown
  • Labels:

  •  பீரியட்ஸ் எனப்படும் மாதவிடாய் தாமதாவது பலருக்கும் ஒரு  பிரச்சினையாகவே இருக்கிறது. மாதா மாதம் சரியாக பீரியட்ஸ் வராமல்  தவிக்கும் பெண்கள் பலர். ஆனால் அதற்கான சரியான காரணத்தை அறியாமல்  கவலைப்படுவதால் பலன் ஏதும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
    பீரியட்ஸ் வராமல் தாமதாவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில்  முக்கியமானது ஸ்டிரஸ் எனப்படும் மன அழுத்தம் மற்றும் பதட்டம். இதுதான்  நமது உடலில் பல உபாதைகள் ஏற்பட முக்கியக் காரணியாக இருக்கிறது.  தாமதமான பீரியட்ஸ் பிரச்சினைக்கும் இது முக்கியக் காரணமாக  இருக்கிறதாம்.

    மன அழுத்தம் அதிகரிக்கும் போது, பெண்களின் உடலில், ஜிஎன்ஆர்எச் எனப்படும் ஹார்மோனின் அளவு குறைகிறது. இந்த ஹார்மோன்தான், கர்ப்பம் தரிப்பதையும், பீரியட்ஸ் வருவதையும் வழிநடத்தும் முக்கிய ஹார்மோனாகும். எனவே இந்த ஹார்மோன் குறையும்போது பீரியட்ஸ் வருவது மட்டுமல்ல, கர்ப்பம் தரிப்பதும் கூட தாமதமாகும் என்பது முக்கியம். இதுபோன்ற ஹார்மோன் குறைபாடு இருக்கிறதா என்பதை அறிய டாக்டர்களை அணுகி பரிசோதித்துக் கொள்வது நல்லது.
    சில பெண்களுக்கு பீரியட்ஸ் வரவிருக்கும் நாளுக்கு முன்பாக திடீரென காய்ச்சல், சளி, இருமல் ஆகிய பிரச்சினை ஏற்படலாம். அப்படி வந்தால் பீரியட்ஸ் தாமதமாகும்.அதேசமயம், இந்த சிறிய உடல் நலக்குறைபாடுகள் குறுகிய காலமே இருக்கும்.அது சரியானவுடன் பீரியட்ஸ் முறையாக நடைபெறக் கூடும். ஒருவேளை அப்படியும் தாமதமானால் டாக்டர்களை கலந்து ஆலோசிப்பது நல்லது.
    பணி நேரங்களில் ஏற்படும் திடீர் மாற்றங்களும் பீரியட்ஸை டிலே செய்யும் வல்லமை படைத்தவை. குறிப்பாக தொடர்ந்து பகல் நேரத்தில் பணியாற்றி வரும் பெண்களுக்கு திடீரென இரவுப் பணி போடும்போதும் அவர்களது உடலில் மாற்றங்கள் ஏற்படும். இது பீரியட்ஸை தாமதப்படுத்தும். அதேபோல் வீட்டில் திருமணம் போன்ற விழாக்கள் திடீரென குறுக்கிடும்போது ஓய்வில்லாமல் பணியாற்ற நேரிடும்.அப்போது உடலின் ரிதம் மாறி அதனால் பீரியட்ஸ் தாமதமாகலாம். உங்களது உடல் வழக்கமான நிலைக்கும், இயல்புக்கும் திரும்பும்போது பீரியட்ஸும் சகஜ நிலையை அடையும்.
    குழந்தைப் பிறப்பைத் தடுக்க பயன்படுத்தும் மாத்திரைகள், மாதவிடாயைப் பாதிக்கக் கூடிய வகையிலான மருந்து, மாத்திரைகளாலும் கூட பீரியட்ஸ் தாமதமாகும். இதற்கு டாக்டரிடம் அறிவுரை பெறுவது நல்லது.
    அதிக எடை கொண்டவர்களுக்கும், அதேபோல மிகவும் குறைந்த எடை கொண்டவர்களுக்கும் கூட பீரியட்ஸ், தாமதம் தவிர்க்க முடியாதது. சீரான, தொடர்ந்த உடற்பயிற்சியும், சத்தான சாப்பாடும் இவர்களுக்கு அவசியம். உடலில் அதைக எடை கூடாமலும், கொழுப்புச் சத்து சேர்ந்து விடாமலும் கவனமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
    அதேசமயம் நமது உடலில் தேவைக்கேற்ற கொழுப்புச் சத்து இல்லாவிட்டாலும் கூட சிக்கல்தானாம். தேவையான கொழுப்புச் சத்து இல்லாமல் போனால் சுத்தமாக பீரியட்ஸ் வராமல் நின்று விடுமாம். இதற்குப் பெயர் அமீனோரியா என்று பெயர். எனவே ஆரோக்கியமான உடலும், எடையும் இருப்பதை உறுதி செய்வது பெண்களுக்கு நல்லது.
    மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் பருவத்தை நெருங்கி வரும் பெண்களுக்கு பீரியட்ஸ் முறையாக இருக்காது. சில சமயம் லேசானதாக இருக்கும். சில சமயம் உதிரப் போக்கு அதிகமாக இருக்கும். சிலருக்கு தாமதமாகும். சிலருக்கு நீண்ட நாட்கள் கூட தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். இதற்காகப் பயந்து விடத் தேவையில்லை. டாக்டர்களின் அறிவுரைப்படி நடந்து கொள்ளவும்.
    ஹார்மோன் சமச்சீரின்மையும் பீரியட்ஸ் குறைபாட்டுக்கு ஒரு காரணம். பிசிஓடி எனப்படும் பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் உள்ள பெண்களுக்கு பீரியட்ஸ் முறையாக வராது. தாமதமாக வரும், அதிக உதிரப்போக்கு சில சமயங்களில் இருக்கும். அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டால் இதை ஓரளவு சரி செய்யலாம்.
    வயதுக்கு வரும் டீன் ஏஜ் பெண்களில் பலருக்கும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பீரியட்ஸ் முறையாக இருக்காது. இதற்காக அவர்கள் பயந்து விடத் தேவையில்லை. காரணம், அவர்களது உடலில் ஹார்மோன்கள் முறையாக வளர்ச்சி அடைந்திருக்காது. காலப் போக்கில் ஹார்மோன் வளர்ச்சி சரியானவுடன், பீரியட்ஸும் சரியாகி விடும்.
    கடைசியாக, அதேசமயம், முக்கியமானது, பீரியட்ஸ் தாமதத்திற்கு மேற்கண்ட காரணங்கள்தான் உள்ளன என்று அர்த்தம் இல்லை. கர்ப்பம் தரித்தாலும் கூட பீரியட்ஸ் வராமல் போகலாம். எனவே அந்த டெஸ்ட்டையும் செய்து பார்த்து விடுவது நல்லது

    0 comments:

    Post a Comment

     
    Copyright 2010 Online